செய்திகள்
மோர்

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கும் ஆவின் நிறுவனம்

Published On 2019-07-25 04:20 GMT   |   Update On 2019-07-25 04:20 GMT
காஞ்சிபுரம் வரும் அத்திவரதர் பக்தர்களுக்கு தினந்தோறும் 2 ஆயிரம் லிட்டர் மோரை ஆவின் நிறுவனம் வழங்குகிறது. இது 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வினியோகிக்கப்படுகிறது.
சென்னை:

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது.

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழா என்பதால் அத்தி வரதரை தரிசிக்க தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

கடந்த வாரம் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பக்தர்கள் பலியானார்கள். இதையடுத்து பக்தர்களை ஒழுங்குபடுத்தவும், பாதுகாப்பு பணி மற்றும் மருத்துவ குழுவினர் கூடுதலாக நியமிக்கப்பட்டனர். தரிசன முறையிலும் சிறிது மாற்றம் செய்யப்பட்டது.

இதனால் தற்போது பக்தர்கள் ஓரளவு நெரிசல் இன்றி சென்று வருகின்றனர். இதுவரை சுமார் 30 லட்சத்துக்கும் மேலானோர் அத்தி வரதரை தரிசித்து உள்ளனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் அத்திவரதர் தரிசனத்துக்கு சுமார் 3 மணி முதல் 6 மணி நேரம் வரை ஆகிறது. அவர்கள் கோவிலை சுற்றி நீண்ட வரிசையில் காத்திருந்து செல்கின்றனர்.



பகல் நேரங்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களின் சோர்வை நீக்கும் வகையில் அவர்களுக்கு தற்போது ஆவின் நிறுவனம் சார்பில் மோர் வழங்கப்படுகிறது.

தினந்தோறும் 2 ஆயிரம் லிட்டர் மோரை ஆவின் நிறுவனம் கொடுக்கிறது. இது 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் பேருக்கு வினியோகிக்கப்படுகிறது. மேற்கு கோபுரம் அருகே உள்ள பதினாறு கால் மண்டபம் பகுதியில் பக்தர்களுக்கு மோர் சப்ளை செய்யப்படுகிறது.

பக்தர்களின் வரவேற்பை பொறுத்து வினியோகிக்கப்படும் மோரின் அளவை அதிகரிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆவின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கப்படுகிறது. இதற்கு பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவது கிடையாது.

காக்களூரில் உள்ள பால் தொழிற்சாலையில் தயிரை மோராக மாற்றுகின்றனர். அதில் நீர், இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவை சோதனைக்குப் பிறகே கலந்து வினியோகிக்கப்படுகிறது. பக்தர்களின் வரவேற்பை பொறுத்து கூடுதலாக மோர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விழாவின் 25-வது நாளான இன்று மஞ்சள் நிற பட்டில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரத்தில் இன்று காலை சாரல் மழை பெய்தது. பக்தர்கள் மழையில் நனைந்தபடி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News