செய்திகள்
எடப்பாடி பகுதியில் மாற்றப்பட்ட 50 ரூபாய் கள்ள நோட்டு

எடப்பாடி பகுதியில் ரூ.50, ரூ.200 கள்ள நோட்டுகள் புழக்கம்

Published On 2019-07-24 05:48 GMT   |   Update On 2019-07-24 05:48 GMT
எடப்பாடி பகுதியில் ரூ.50, ரூ.200 கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதால் வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர்.
எடப்பாடி:

சேலம் மாவட்டம் எடப்பாடியில் விசைத்தறி தொழில் அதிகமாக உள்ளது.

சமீப காலமாக எடப்பாடி பஸ் நிலையம், கடைவீதி, தினசரி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் உள்ள நேரங்களிலும், இரவு நேரங்களிலும் மர்ம நபர்கள், 50 மற்றும் 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.

தற்போது ஆடி பண்டிகை காலம் என்பதால் திருவிழா கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதைபோல் அழகு சாதன பொருட்கள் கடைகளிலும், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளிலும் ஏராளமான மக்கள் கூடுகின்றனர்.

இதை பயன்படுத்தி மர்ம நபர்கள் 50 ரூபாய், 200 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்றி விடுகின்றனர்.

இந்த நோட்டுகளை கடைக்காரர்கள் வங்கியில் செலுத்தும்போது, அது கள்ள நோட்டு என்று திரும்பி வந்து விடும்போது தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிகின்றனர். இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடும் மர்ம கும்பலை கூண்டோடு கண்டுபிடித்து அவர்களை கைது செய்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வியாபாரி நடராஜன் (37) என்பவர் கூறியதாவது:-

எடப்பாடி பகுதியில் மர்ம நபர்களால் மாற்றப்பட்ட கள்ள ரூபாய் நோட்கள் அச்சு அசலாக உண்மை நோட்டின் வண்ணத்திலேயே உள்ளது. அதே நேரம் அத்தகைய போலி ரூபாய் நோட்டுகளில், உண்மை ரூபாய் நோட்டின் நடுவில் உள்ளது போன்ற, ஆர்.பி.ஐ. என்ற ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட உலோக கோடு இல்லை.

மேலும் அத்தகைய நோட்டுகளில் தண்ணீர் பட்டால், அதன் வண்ணம் சற்று கலங்குவதுபோல் உள்ளது. இது போன்ற போலி ரூபாய் நோட்டுகள் உலா வருவதை கருத்தில் கொண்டு இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News