செய்திகள்
திருட்டு நடந்த வீட்டை படத்தில் காணலாம்.

கோவை அருகே ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 167 பவுன் நகை-பணம் திருட்டு

Published On 2019-07-22 04:44 GMT   |   Update On 2019-07-22 04:44 GMT
கோவை அருகே ஸ்டூடியா உரிமையாளர் வீட்டில் 167 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பழனியப்பா அவென்யூவில் வசித்து வருபவர் சதிஷ் (59). இவர் கோவையில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு சரண்யா, சுபிஷா ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சதிஷ் தனது மனைவி மற்றும் மகள்களுடன் மலம்புழா அணைக்கு சுற்றுலா சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சதிஷ் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து அங்குள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சாவியை எடுத்து திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த செயின், வளையல், மோதிரம், ஒட்டியானம் உள்ளிட்ட 167 பவுன் நகை, ரூ. 1½ லட்சம் ரொக்கப்பணம், 5 கிலோ வெள்ளி நகைகளை திருடி சென்று விட்டனர்.

மலம்புழா சென்று விட்டு வீடு திரும்பிய சதிஷ் வழக்கம் போல் கதவை திறந்து உள்ளே சென்றார். அங்கு பீரோ திறந்து கிடந்தது. ஜன்னலும் உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நகை, பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர். போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது.

நகை திருடிய மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் அப்பகுதியில் கண்காணிப்பு கேமிரா எதுவும் உள்ளதா? அதில் நகை திருடியவர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஸ்டூடியோ உரிமையாளர் வீட்டில் 167 பவுன் நகை மற்றும் பணம் திருட்டு போய் இருப்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News