செய்திகள்
பணம் கொள்ளை

லஞ்ச ஒழிப்பு போலீசார் என மிரட்டி கேரள வியாபாரிகளிடம் ரூ.13 லட்சம் பணம் பறித்த கும்பல்

Published On 2019-07-18 05:00 GMT   |   Update On 2019-07-18 05:00 GMT
லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி கேரள வியாபாரிகளிடம் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் ரூ.13 லட்சம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள தளச்சேரியை சேர்ந்தவர்கள் நவுசாத், அபினேஷ்.

தங்கநகை வியாபாரிகளான இவர்கள் நேற்று நகை வாங்குவதற்காக ஒரு காரில் கோவைக்கு வந்தனர். அவர்கள் சிவானந்தா காலனி அருகே வந்தபோது 2 கார்களில் வந்த 5 பேர் கும்பல் தங்கநகை வியாபாரிகள் வந்த காரை தடுத்து நிறுத்தினர்.

அப்போது 5 பேர் கும்பல் தங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டனர். மேலும் உங்கள் காரில் சோதனை நடத்த வேண்டும் என்று கூறினர். போலீஸ் தான் என்று நம்பிய தங்கநகை வியாபாரிகள் சோதனை நடத்த சம்மதித்தனர்.

அப்போது வியாபாரிகள் நகை வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.13 லட்சம் பணத்தை எடுத்து கொண்ட அவர்கள் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு வந்து பணத்துக்கான ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என கூறி விட்டு அவர்கள் வந்த காரில் தப்பி சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் ரத்தினபுரி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவத்தை கூறினர். போலீசார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு சோதனை ஏதும் நடத்தப்பட்டதா என்று கேட்டனர். அதற்கு எந்த சோதனையும் நடத்தப்படவில்லை என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

அப்போது தான் லஞ்ச ஒழிப்பு போலீஸ் என கூறி கேரள வியாபாரிகளிடம் இருந்து 5 பேர் கொண்ட கும்பல் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கேரள வியாபாரிகள் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் என கூறி ரூ.13 லட்சத்தை பறித்து சென்ற கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் பொருந்தி இருந்த கண்காணிப்பு கேமிரா மூலம் அவர்கள் வந்த கார் மற்றும் அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
Tags:    

Similar News