செய்திகள்

சட்ட விரோத மணல் குவாரி மீது எடுத்த நடவடிக்கை என்ன?- கலெக்டர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட் உத்தரவு

Published On 2019-06-13 10:41 GMT   |   Update On 2019-06-13 10:41 GMT
புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட விரோத மணல் குவாரி மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து கலெக்டர் பதில் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

புதுக்கோட்டை அறந்தாங்கியைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்கினை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, ஆளப்பிறந்தான் கிராமத்தில், 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட தெற்கு வெள்ளாற்றில் சிலர் இரவு பகலாக சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு கடத்தப்படும் மணல் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பல கோடி ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதனால் தெற்கு வெள்ளாற்றில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் பெய்யும் மழையின் அளவும் மிகக் குறைவு. அப்படி பெய்யும் மழை நீரும் ஆற்றில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் நீர்தேக்கமின்றி வீணாவதால், விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சட்டவிரோத மணல் கடத்தலை இப்பகுதி பொதுமக்கள் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகிகள், காவல் துறையில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால், ஆளப்பிறந்தான் பகுதியில் உள்ள ஆயக்காடு பகுதி விளைநிலம் அனைத்தும் தரிசாகி, விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும். ஆகவே அப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு உத்தரவிடுவதோடு, யாரும் மணல் கொள்ளையில் ஈடுபடாதவாறு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டவிரோத மணல் குவாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ஜூலை 2-ந் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News