செய்திகள்

திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை

Published On 2019-06-01 22:21 GMT   |   Update On 2019-06-01 22:21 GMT
திருத்தணியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது மின்கம்பிகள் அறுந்ததால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
திருத்தணி:

திருத்தணியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திருத்தணி பழைய தர்மராஜ கோவில் அருகே திருத்தணி- சென்னை ரெயில் மார்க்கத்தில் உள்ள மின்கம்பிகள் திடீரென அறுந்து விழுந்தன.

இதனால் திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி சென்ற மின்சார ரெயில் மற்றும் திருத்தணியில் இருந்து சென்னை நோக்கி செல்ல வேண்டிய மின்சார ரெயில் திருத்தணி ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

அதே போல திருத்தணி வழியாக பெங்களூரு சென்ற ஹம்சாபாத் எக்ஸ்பிரஸ் ரெயிலும் நடு வழியில் நிறுத்தப்பட்டது.

இதனால் ரெயில் பயணிகள் மிகவும் அவதிக்கு ஆளானார்கள். ஆத்திரம் அடைந்த பயணிகள் திருத்தணி ரெயில் நிலைய நடைமேடையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதிகாரிகள் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ரெயில்வே ஊழியர்கள் அறுந்து கிடந்த மின்கம்பிகளை சரி செய்தனர். 3 மணி நேரத்திற்கு பின்னர் ரெயில்கள் இயக்கப்பட்டன.

பள்ளிப்பட்டு பகுதியிலும் நேற்று மாலை ¼ மணி நேரம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
Tags:    

Similar News