செய்திகள்

கமல் பொதுக்கூட்டத்தில் செருப்பு வீச்சு - 11 பேர் கைது

Published On 2019-05-16 06:03 GMT   |   Update On 2019-05-16 06:03 GMT
திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கமல்ஹாசன் பொதுக்கூட்டத்தில் மேடையை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக 11 பேரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:

திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ‘பாரத் மாதா கி ஜே’ என்று ஆவேசமாக குரல் எழுப்பியபடி மேடையை நோக்கி செருப்பை வீசினார். அது மேடைக்கு முன்னதாக விழுந்தது.

மேலும் சிலரும் கோ‌ஷம் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில் அவர்கள் பா.ஜனதா மண்டல் தலைவர் வேல்முருகன், அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்த சோலைமணி, வெற்றிவேல், செந்தில்குமார், ஆறுமுகம், வேலு, ராஜேஸ்வர், ரமேஷ் குமார், கிருஷ்ணன், ராமலிங்கம், பிரபாகரன் என தெரியவந்தது.

மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் அவர்கள் 11 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் அரவக்குறிச்சியில் கமல்ஹாசன், இந்துக்கள் குறித்து பேசியதை கண்டித்து இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.

கமல்ஹாசனை தேசத்துரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து முன்னணியினர் பழங்காநத்தத்தில் காவி கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கமல்ஹாசனுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச்சென்றனர்.

Tags:    

Similar News