செய்திகள்

ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் - கைதான நர்சு உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரணை

Published On 2019-05-04 08:42 GMT   |   Update On 2019-05-04 08:42 GMT
ராசிபுரத்தில் குழந்தை விற்பனை சம்பவம் தொடர்பாக கைதான நர்சு உள்பட 8 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். #RasipuramNurse #CBCID
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் காட்டூர் காட்டு கொட்டாயை சேர்ந்தவர் அமுதவள்ளி (வயது 50) விருப்ப ஓய்வு பெற்ற நர்சான இவர் சட்ட விரோதமாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்ததாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை பவர்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட ஈரோட்டை சேர்ந்த நர்சு பர்வீன், அருள் சாமி, நிஷா என்ற ஹசீனா, லீலா, செல்வி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 14 குழந்தைகள் வரை விற்பனை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது. இதற்காக லட்சக்கணக்கான ரூபாய் கை மாறியதும் அம்பலமானது.

இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 5 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குழந்தை விற்பனை தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. சேலம் சரக சி.பி.சி.ஐ.டி. துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சாரதா, பிருந்தா மற்றும் 2 மாவட்ட உதவி ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த வழக்கு குறித்த ஆவணங்களை பெறுவதற்காக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் நேற்று நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு அருளரசு அலுவலகத்துக்கு வந்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா 250 பக்கம் கொண்ட ஆவணங்களை தயாரித்திருந்தார். இந்த ஆவணங்களை நாமக்கல் எஸ்.பி. அருளரசு பார்வையிட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தார்.

இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களது விசாரணையை தொடங்கினார்கள்.

200-க்கும் மேற்பட்ட பக்க ஆவணங்களை முதலில் படித்து பார்க்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே விசாரணை நடந்திருந்தாலும் நாங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணையை தொடங்க உள்ளோம்.

இந்த வழக்கில் கைதாகி ஜெயிலில் உள்ளவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். அவர்கள் அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் எங்கெங்கெல்லாம் அவர்கள் குழந்தைகளை விற்றார்களோ அங்கு நேரில் சென்று விசாரணை நடத்துவோம்.

முழுமையான விசாரணை நடந்த பின்பு கோர்ட்டில் வழக்கு தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார். #RasipuramNurse #CBCID
Tags:    

Similar News