செய்திகள்

முதுநிலை, பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும்- துணைவேந்தர்

Published On 2019-05-02 11:06 GMT   |   Update On 2019-05-02 11:06 GMT
முதுநிலை, பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வை அண்ணா பல்கலைகழகமே நடத்தும் என்று துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார். #AnnaUniversity
சென்னை:

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான் மற்றும் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மற்றும் முதுநிலை பொறியியல், பட்ட படிப்புக்கு அண்ணா பல்கலைக் கழகத்தின் ‘டான்செட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.

ஆனால் இந்த வருடம் அண்ணா பல்கலை கழகம் மற்றும் அதனுடைய உறுப்பு கல்லூரிகள், கிளைகள் ஆகியவற்றில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு மட்டும் தனியாக நுழைவுத்தேர்வு நடத்துவதாக அறிவித்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட இந்த முறைக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது. அண்ணா பல்கலைக் கழகத்துக்கு மட்டும் தனியாக நுழைவு தேர்வினை நடத்துவதால் 2 நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டு இருப்பதாக அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய தேர்வு முடிவுகளை பரிசீலிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

மேலும் அரசு சார்பிலும் இந்த புதிய நுழைவுத் தேர்வு முறையை கைவிட வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அண்ணா பல்கலைகழக கல்லூரிக்கு தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது பற்றி விவாதிக்கப்பட்டது. புதிய அறிவிப்பால் மாணவர்கள் நலன் பாதிக்கப்படுவது பற்றி ஆலோசித்தாக தெரிகிறது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த துணை வேந்தர் சூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

பொறியியல் முதுநிலை படிப்புகளுக்கு இதுவரையில் அரசின் சார்பில் நடைபெற்று வந்த டான்செட் நுழைவு தேர்வு மட்டுமே நடைபெறும். இதனை அண்ணா பல்கலைக்கழகம் வழக்கம்போல் நடத்தும்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் ஏ.யூ.சி.இ.டி. நுழைவுத் தேர்வு இல்லை. இதுபற்றிய தகவல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார். #AnnaUniversity
Tags:    

Similar News