செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் கும்பலால் சிறுமி கொலையா?- சமூக வலைத்தளங்களில் பரவும் ஆடியோவால் பரபரப்பு

Published On 2019-03-27 08:07 GMT   |   Update On 2019-03-27 08:07 GMT
பொள்ளாச்சி பாலியல் கும்பலால் ஒரு சிறுமி கொலை செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பெண் பேசிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. #PollachiCase
பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோவையில் முகாமிட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், திருநாவுக்கரசு மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததில் ஒரு சிறுமி இறந்து விட்டதாக கூறி பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் அந்த பெண் கூறியிருப்பதாவது:-

சகோதர, சகோதரிகள் யாராக இருந்தாலும் நான் சொல்ல போற விஷயத்தை கொஞ்சம் கேளுங்க. தயவு செய்து உதவி பண்ணுங்க. நான் திருநாவுக்கரசால் பாதிக்கப்பட்ட பெண் பேசுறேன். இதுவரைக்கும் நான் அந்த உண்மையை யாரிடமும் சொன்னது இல்ல. திருநாவுக்கரசால் ஒரு பெண் இறந்து போய் இருக்கு. அந்த வீட்டின் பின்புறம் தான் அந்த சடலத்தை புதைத்து இருக்கிறார்கள். இதுவரைக்கும் இந்த செய்தி வெளியில் வரவில்லை. உங்களால் முடிந்தால் இந்த செய்தியை அனுப்புங்க.

அப்புறம் திருநாவுக்கரசு மட்டுமல்ல அந்த கும்பலில் 9 பேர் வரை இருக்கின்றனர். இறந்த அந்த பொண்ணு ரொம்ப சின்ன பொண்ணு. சிறுமி ஆவார். வயதுக்கு கூட வரவில்லை. விடிய, விடிய அந்த பொண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததால் இறந்து போய் விட்டது. அப்போ நாங்க 5 பெண்கள் அங்க இருந்தோம். எங்க கிட்ட இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டினர். அங்கிருந்து நாங்க 5 பேர் தப்பித்து வந்து இருக்கோம். அதுல பாதிக்கப்பட்ட பெண் தான் நான். நான் சொல்லுறது உண்மை தான். இந்த வாய்ஸ் எப்படி அனுப்புறது எனக்கு தெரியல. எனக்கு எப்படியாவது உதவி பண்ணுங்க.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் கூறியதாவது:-

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக பல ஆடியோ, வீடியோக்கள் வெளி வருகிறது. அவற்றில் உள்ள உண்மை தன்மையை பரிசோதித்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது சமூக வலைத்தளங்களில் பாதிக்கப்பட்ட பெண் பேசியதாக ஆடியோ வெளியானதாக கூறுகின்றனர். ஆனால் அந்த ஆடியோ எனக்கு இதுவரைக்கும் வரவில்லை. அந்த ஆடியோவில் உள்ள உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #PollachiCase
Tags:    

Similar News