செய்திகள்

எல்லையில் பதட்டமான சூழல்: கூடங்குளம் அணுமின்நிலையம், ஐ.எஸ்.ஆர்.ஓ. மையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published On 2019-02-28 05:49 GMT   |   Update On 2019-02-28 05:49 GMT
இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #PulwamaAttack #KudankulamNuclearPowerPlant
நெல்லை:

இந்திய எல்லையில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மகேந்திர கிரியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் (இஸ்ரோ) திரவ இயக்க திட்ட மையம் அமைந்துள்ளது. அங்கு ராக்கெட்டுகளுக்கான திரவ எரிபொருள் சோதனை கூடம் உள்ளது.

அதேபோல் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 2 அணு உலைகள் மூலம் மின் உற்பத்தி நடந்து வருகிறது. மேலும் 3,4வது அணு உலைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நாங்குநேரியை அடுத்த விஜயநாராயணத்தில் கப்பல் படை கண்காணிப்பு சிக்னல் மையம் செயல்பட்டு வருகிறது. இவைகள் அனைத்தும் தேசத்தின் பாதுகாப்பு மிக்க முக்கிய மையங்கள் ஆகும்.

கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படைதளம், மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ மையங்களில் வழக்கமாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அவர்களது கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள். #PulwamaAttack #KudankulamNuclearPowerPlant
Tags:    

Similar News