செய்திகள்

கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட சூப்பர் மூன் - சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Published On 2019-02-20 04:52 GMT   |   Update On 2019-02-20 04:52 GMT
கொடைக்கானலில் பல ஆண்டுகளுக்கு பிறகு தென்பட்ட அரிய நிகழ்வான சூப்பர் மூன் நிலவை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

கொடைக்கானல்:

உலகின் பல்வேறு நாடுகளில் சூப்பர் மூன் என்றழைக்கப்படும் மிகப் பெரிய நிலவு வானில் தோன்றியது. இந்த நிலவை கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு பரவசமடைந்தனர்.

பூமிக்கு அருகில் தோன்றும் இந்த நிலவை சாதாரண கண்களால் காணலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. வழக்கமான நிலவின் அளவில் இருந்து 14 சதவீதம் பெரியதாகவும், 38 மடங்கு அதிக ஒளியுடனும் பளிச்சென்று இந்த நிலவு தோன்றியது. இந்த நிலவை உலகின் பல்வேறு நாடுகளில் கண்டு ரசித்தனர்.

இது குறித்து கொடைக்கானல் வானியல் மைய விஞ்ஞானி செல்வேந்திரன் தெரிவிக்கையில், பின் பனிக்காலத்தில் இந்த ஆண்டின் மிகப் பெரிய நிலவு நேற்று மாலை வானில் தென்பட்டது. சாதாரண நாட்களில் காணப்படும் நிலவை விட அளவில் பெரியதாகவும், அதிக ஒளியுடனும் இருப்பதால் இதனை பனி நிலவு என்றும் அழைப்பதுண்டு.

அடுத்த முறை இது போன்ற நிலவு 2026-ம் ஆண்டில் மட்டுமே காண முடியும். கொடைக்கானலில் இந்த நிலவை சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கண்டு உற்சாகமடைந்தனர் என்றார்.

Tags:    

Similar News