செய்திகள்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணியை தடுத்து நிறுத்திய பேராசிரியர் ஜெயராமன் கைது

Published On 2019-02-01 11:37 GMT   |   Update On 2019-02-01 11:37 GMT
கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவன பணியை தடுத்து நிறுத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார். #kathiramangalam #ongc

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் எரிவாயு குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கதிராமங்கலம் கிராம மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், மறியல் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். மேலும் கிராம மக்களின் போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

எரிவாயு திட்டத்தால் விவசாய நிலங்கள் பாழாகிவிடும் என்றும் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விடும் என்று விவசாய சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பராமரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களாக நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் கதிராமங்கலம் கிராமத்தில் இன்று காலை திடீரென ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் பெட்ரோல் கிணற்றை பராமரிப்பு பணிகளை தொடங்கினர்.

இதை அந்த பகுதி கிராம மக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இங்கிருந்து வெளியேறுமாறு கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள், கதிராமங்கலத்தில் பணியை தொடங்கியது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் உடனடியாக கதிராமங்கலம் கிராமத்துக்கு சென்றார். அப்போது அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவன ஊழியர்களிடம் பணிகளை நிறுத்தி விட்டு செல்லுமாறு கூறினார். மேலும் கிராம மக்களும் திரண்டு நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த சம்பவம் பற்றி பந்தநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் மற்றும் ராஜ் ஆகியோரை கைது செய்தனர். #kathiramangalam #ongc

Tags:    

Similar News