செய்திகள்

எழிலகம் வளாகத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம்- மறியல் செய்த 300 பேர் கைது

Published On 2019-01-28 09:25 GMT   |   Update On 2019-01-28 09:25 GMT
சென்னை எழிலகம் வளாகத்தில் மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 300 பேரை போலீசார் கைது செய்தனர். #JactoGeo
சென்னை:

அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. கோர்ட்டு மற்றும் அரசின் கோரிக்கைகளை ஏற்காமல் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

1 வாரமாக நீடித்து வரும் இந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அரசு அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து அரசு ஊழியர்கள் இன்றும் மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை எழிலகம் வளாகத்தில் சுமார் 500 பேர் திரண்டனர். அதன் ஒருங்கிணைப்பாளர்கள் வெங்கடேசன், அந்தோணிசாமி, பக்தவச்சலம் ஆகியோர் தலைமையில் திரண்டு அரசு ஊழியர்கள் சிறிது நேரம் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி பேசினார்கள்.

அதன் பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற 300 பேரை போலீசார் கைது செய்தனர். எழிலகம் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் அரசு ஊழியர்களை சாலையில் அமர விடாமல் தடுத்து மறித்து பஸ்களில் ஏற்றி சென்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் அதிகமானோர் இருந்தாலும் கைது செய்ய முற்பட்டவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பின்பக்கம் வழியாக ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் போராட்டத்தில் தீவிரம் காட்டிய ஆண்- பெண் ஊழியர்கள் தாமாக முன்வந்து கைதானார்கள். சிலர் தங்களது குடும்ப சூழ்நிலைகளை காரணம் காட்டி எழிலகம் வளாகத்தில் இருந்து கைது நடவடிக்கைக்கு பயந்து தப்பி சென்றனர்.

கைது செய்யப்பட்ட ஊழியர்கள் புதுப்பேட்டை, பெரம்பூர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சமுதாய கூடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என்ற நோக்கத்தில் சாலையில் அமராமல் கைதானார்கள். இதனால் அவர்கள் இன்று மாலையில் விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.

இதற்கிடையில் அரசு அலுவலர் ஒன்றியம் (என்.ஜி.ஓ.), தலைமை செயலக சங்கம், அரசு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் சங்கம், அரசு ஊர்தி ஓட்டுனர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் இன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து இன்று மாலையில் முடிவு செய்கிறார்கள்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடாமல் இருந்து வந்த தலைமை செயலக ஊழியர்கள் இன்று காலை 11 மணி அளவில் தங்கள் பணிகளை விட்டு விட்டு ஒன்று கூடினார்கள். தீவிரம் அடைந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா வேண்டாமா என்பது பற்றி இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று சங்க நிர்வாகிகள் அவர்கள் மத்தியில் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் பணிக்கு திரும்பினார்கள். #JactoGeo
Tags:    

Similar News