செய்திகள்

சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறு பேச்சு- சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு

Published On 2018-12-01 04:22 GMT   |   Update On 2018-12-01 04:22 GMT
சபரிமலை அய்யப்பன் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை, திருப்பூர் போலீஸ் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. #Sabarimala #seeman
கோவை:

கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் சரவணம்பட்டி போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அய்யப்பன் பற்றியும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் குறித்தும் மிகவும் இழிவாக பேசி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது மத வழிபாட்டு சுதந்திரத்துக்கு எதிரானதாகும். எனவே சீமான் மீது இந்திய அரசியல் தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

சூலூர் அருகே உள்ள அரசூரை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஜெஹிந்த் முருகேசன் சூலூர் போலீசில் அளித்த புகாரில் இந்து தெய்வங்களையும், இந்து மத வழிபாட்டு முறைகளையும், ஆன்மிக குருக்கள் மற்றும் இந்து மக்களை இழிவாக கொச்சைபடுத்தி பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) அமைப்பை சேர்ந்த சுப்பிரமணியம், செந்தில், ரவிக்குமார், மணிகண்டன், முருகன் மற்றும் நிர்வாகிகள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், சபரிமலை அய்யப்பனையும், பக்தர்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளார். மேலும் இந்து மதம் சார்ந்தவர்களையும், பெண்களையும் தரக்குறைவான முறையில் விமர்சித்து பேசி உள்ளார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மத ஒற்றுமையை சீர்குலைத்து மதகலவரத்தை தூண்டும் வகையில் அவர் பேச்சு இருந்தது. அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர். #Sabarimala #seeman
Tags:    

Similar News