செய்திகள்
கஜா புயலால் பலியான சிறுமியின் உடல் அருகே உறவினர்கள் சோகத்தில் இருப்பதை படத்தில் காணலாம்.

பட்டுக்கோட்டை அருகே தென்னந்தோப்பில் தங்கி இருந்த பருவமடைந்த சிறுமி பலி

Published On 2018-11-20 07:18 GMT   |   Update On 2018-11-20 07:18 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே தென்னந்தோப்பில் தங்கி இருந்த பருவமடைந்த சிறுமி கஜா புயலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #GajaCyclone
பட்டுக்கோட்டை:

கஜா புயலால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட காவிரி டெல்டாவின் கடற்கரையோர மாவட்டங்களில் பெரும் சேதம் எற்பட்டது. கஜா புயலால் 50- க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மரங்கள் விழுந்து, சாலைகள், மின் இணைப்புகள், செல்போன் கோபுரங்கள் சேதமடைந்ததால் கிராமங்கள் அனைத்தும் தனித்தனி தீவுகளாகி காட்சி அளிக்கின்றன.

இந்தப் புயலால் பெரும் சேதத்தை சந்தித்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியின் மரணம் கேட்பவரை அதிர்ச்சி அடையும் வகையில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செல்வராஜ் (வயது60). இவர், அங்குள்ள தென்னந்தோப்பில் கூரை வீடு அமைத்து, குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார். 7-ம் வகுப்பு படித்து வந்த அவரது 13 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவம் அடைந்தாள்.

அதற்கான சடங்குகளை செய்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பிறகு அதே தோப்பில் சற்றுத் தொலைவில் இருந்த குடிசையில் அந்தப் பெண்ணை தனியாக தங்க வைத்தனர். இரவில் துணைக்கு அவரது தாய் இருந்தார்.

தென்னந்தோப்பில் அருகில் வீடுகளே இல்லாத இருள் சூழ்ந்த, கடந்த 15-ந்தேதி நள்ளிரவு 2 மணியளவில் பெரும் சத்தத்துடன் சுழன்றடித்த கஜா புயல் காற்றால், சுற்றியிருந்த தென்னை மரங்கள் அடுத்தடுத்து முறிந்து விழுந்துள்ளன. அப்போது, குடிசை வீட்டின் மீதும் தென்னை மரங்கள் விழுந்தன. உதவிக்காக இளம்பெண்ணும், அவரது தாயும் எழுப்பிய கூக்குரல் சூறாவளிக் காற்றில் யாருக்கும் கேட்கவில்லை.

மறுநாள் காலையில் புயல் ஓய்ந்த பிறகு சிறுமியும் தாயும் தங்கியிருந்த குடிசை வீட்டின் மீதும் மரங்கள் விழுந்து கிடந்தது. இதை அறிந்த செல்வராஜ், அருகில் உள்ளவர்களின் உதவியுடன், மரங்களை அகற்றினார். அப்போது மகளை சடலமாக மீட்டார்.

மேலும் ஆங்காங்கே சாலைகளில் மரங்கள் விழுந்து கிடந்ததால் சுமார் 20 மணிநேரம் கழித்து, தோளில் சுமந்தே மருத்துவமனைக்கு அந்த இளம்பெண்ணின் தாயார் கொண்டு செல்லப்பட்டார். காலில் பலத்தக் காயம் அடைந்த சிறுமியின் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கஜா புயலால் அப்பகுதியில் உள்ள அனைவரும் பாதிக்கப்பட்டு இருந்ததால் இந்த துயரம், அருகில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாத நிலை இருந்துள்ளது. பிறகு உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு சிறுமியின் உடலை அடக்கம் செய்தனர்.

இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  #GajaCyclone

Tags:    

Similar News