செய்திகள்
கோப்புப்படம்

பாபநாசம் அணை நீர்மட்டம் மேலும் 6 அடி உயர்வு

Published On 2018-11-05 05:29 GMT   |   Update On 2018-11-05 05:29 GMT
பாபநாசம் அணையில் நேற்று 110.70 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 6 அடி உயர்ந்து இன்று காலை 116.70 அடியாக உள்ளது. #PapanasamDam
நெல்லை:

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சாரல் மழை பெய்தது. நகர்புறங்களில் மேகமூட்டமாக காணப்பட்டது.

பாபநாசம் அணை பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும், சிவகிரியில் 1 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 1,801 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து 205 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று 110.70 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் மேலும் 6 அடி உயர்ந்து இன்று காலை 116.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று 127.43 அடியாக இருந்தது. அது ஒரே நாளில் 2 அடி உயர்ந்து இன்று காலை 129.69 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணை நீர்மட்டம் நேற்று 93.80 அடியாக இருந்தது. இன்று காலை ஒரு அடி உயர்ந்து 94.95 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 1,088 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதுபோல மற்ற அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடனாநதி -74.20, ராமநதி-68.75, கருப்பாநதி-69.23, குண்டாறு-36.10, வடக்கு பச்சையாறு-23, நம்பியாறு-22.63, கொடுமுடியாறு-40, அடவிநயினார்-108.75 என நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மழை காரணமாக குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இன்று அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நன்றாக விழுந்ததால் அனைத்து அருவிகளிலும் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று சில இடங்களில் சாரல் மழை பெய்தது. கடற்கரையோர பகுதிகளில் முழு நேரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் உப்பள பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. #PapanasamDam
Tags:    

Similar News