செய்திகள்

சேலத்தில் போலி டாக்டர் 5-வது முறையாக கைது

Published On 2018-11-01 10:22 GMT   |   Update On 2018-11-01 10:22 GMT
சேலத்தில் போலி டாக்டர் ஒருவர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #FakeDoctorArrested
காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த செம்மாண்டப்பட்டி பகுதியில் வசித்து வருபவர் பாலு (வயது 48). இவர், பல ஆண்டுகளாக வீட்டில் வைத்து ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருகிறார்.

5-ம் வகுப்பு படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பதாக ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டரான பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து டாக்டர் பெருமாள் மற்றும் வருவாய் அதிகாரிகள் இன்று காலை செம்மாண்டப் பட்டியில் உள்ள பாலு வீட்டுக்கு சென்று அதிரடியாக ஆய்வு நடத்தினர்.

அப்போது பாலுவின் வீட்டில் மருந்து ஊசிகள், மாத்திரைகள், டானிக், மருத்துவ சம்பந்தப்பட்ட உபகரணங்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பாலு மருத்துவம் சம்பந்தமான எம்.பி.பி.எஸ். படிக்காமலேயே அப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு ஊசி போட்டு, மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரியவந்தது.

இது குறித்து டாக்டர் பெருமாள் ஓமலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று, பாலுவை கைது செய்தனர். அவரது வீட்டில் இருந்து மருத்துவ பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான பாலு ஏற்கனவே இதே போல் ஆங்கிலம் மருத்துவ பார்த்து 4 தடவை கைது செய்யப்பட்டவர் என்றும், தற்போது இது 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் ஓமலூர் போலீசார் தெரிவித்தனர்.

போலி டாக்டர் ஒருவர் 5-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #FakeDoctorArrested

Tags:    

Similar News