செய்திகள்
கொலை நடந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

நெல்லிக்குப்பம் அருகே கட்டிட தொழிலாளி வெட்டி கொலை

Published On 2018-10-25 07:31 GMT   |   Update On 2018-10-25 07:31 GMT
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கட்டிட தொழிலாளி மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லிக்குப்பம்:

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த பெரியநத்தம் பகுதியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 43). கட்டிட தொழிலாளி.

கடலூர் கோண்டூரை சேர்ந்த தங்கமணி என்பவருக்கு நெல்லிகுப்பம் அடுத்த தோட்டப்பட்டு காலனியில் புதியதாக தொகுப்பு வீடு கட்டப்பட்டது. தற்போது அந்த தொகுப்பு வீட்டின் மாடியில் புதிதாக ஒரு அறை கட்டப்பட்டு வந்தது. இந்த பணியில் குணசேகர் உள்பட 4 பேர் ஈடுபட்டு வந்தனர்.

நேற்று அவர்களில் ஒருவர் வேலை முடியும் முன்பே வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து வேலை முடிந்ததும் இரவு அந்த வீட்டின் கீழ்பகுதியில் அமர்ந்து குணசேகர் உள்பட 3 பேர் மது குடித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை அந்த வீட்டில் குணசேகர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக நெல்லிக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குணசேகரின் உடலை கைப்பற்றி பார்வையிட்டனர்.

அப்போது அவரது தலையில் மண்வெட்டியால் வெட்டப்பட்ட காயம் இருந்தது. இதில் குணசேகர் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அங்கு ரத்தக் கறையுடன் கிடந்த மண் வெட்டியை போலீசார் கைப்பற்றினர்.

மோப்ப நாய் அர்ஜூன் அங்கு வரழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து விட்டு 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குமாரபுரம் வரை ஓடி நின்றது.

குணசேகருடன் மது அருந்தியவர்கள் அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தனரா? அல்லது வேறு யாராவது இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே குணசேகரன் கொலை தொடர்பாக அவருடன் மது அருந்திய ஒரு வாலிபர் சேத்தியாத்தோப்பு அருகே பதுங்கி இருந்தபோது போலீசார் அவரை பிடித்தனர். அந்த வாலிபரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த வீட்டின் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நெல்லிக்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News