செய்திகள்

ஜெயலலிதா மரணத்திற்கு தம்பிதுரை தான் காரணம்- செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

Published On 2018-10-23 07:06 GMT   |   Update On 2018-10-23 07:06 GMT
ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் அவரது இறப்புக்கு காரணம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார். #SenthilBalaji #ThambiDurai
மணப்பாறை:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மணப்பாறை சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி பங்கேற்று பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாட்களாக ஐ.சி.யூ. அருகே நின்று வாட்ச்மேன் வேலை பார்த்தவர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை.  ஜெயலலிதாவிற்கு அளித்து வந்த சிகிச்சை குறித்து எந்தவித அக்கறையும் எடுத்துக் கொள்ளாத தம்பி துரைதான் ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம்.

தம்பிதுரை நினைத்திருந்தால் ஜெயலலிதாவை வெளிநாட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் தம்பிதுரையின் கனவு, ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தான் முதல்-அமைச்சராக வேண்டும் என்று 75 நாட்களும் மருத்துவமனை வாசலில் அமர்ந்திருந்தார்.

ஆனால் விசாரணை ஆணையம் இதுவரை தம்பிதுரையை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கவில்லை என்பது தெரியவில்லை. இதில் இருந்தே தெரிகிறது தம்பிதுரை தான் முதல் குற்றவாளி என்று.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும் என்றால், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்கள் பதவி விலக வேண்டும். நாங்கள் 18 பேரும் முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் கவர்னரிடம் மனு கொடுத்தோம்.

இந்த வாரம் 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. நாங்கள் சட்டமன்றத்திற்குள் செல்லும் நிலை வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றப்படுவார்.

பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை ஒத்த கருத்துடைய கட்சி கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக் கொண்டு தேர்தலை சந்திப்போம். இல்லையென்றால் 40 தொகுதிகளிலும் தனித்து நின்று நிச்சயமாக வெற்றி பெறுவோம். எங்களை எதிர்ப்பவர்கள் டெபாசிட் கூட பெற முடியாது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு உண்மை என்பதால் தான், அதற்கு உச்சநீதிமன்றம் சென்று தடையாணை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்கு தெரியவருகின்றது என்றார். #SenthilBalaji #ThambiDurai
Tags:    

Similar News