செய்திகள்
தாராபுரம் மகாராணி கல்லூரி வளாகத்தில் கமல்ஹாசன் மரக்கன்றுகளை நட்டார்.

மாணவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் - தாராபுரத்தில் கமல்ஹாசன் பேச்சு

Published On 2018-09-20 08:54 GMT   |   Update On 2018-09-20 11:49 GMT
நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும் என்று தாராபுரத்தில் கமல்ஹாசன் பேசினார். #Kamalhaasan #MakkalNeedhiMaiam
தாராபுரம்:

மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவன தலைவர் கமல்ஹாசன் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மக்களுடனான பயணம் மேற்கொண்டார்.

தாராபுரம் மகாராணி கல்வி நிறுவனத்தில் அவர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். திறந்த வெளியில் நின்று அவர் பேசியதாவது:

நான் கல்லூரிகளில் பேசக்கூடாது என கூறி மேடை கொடுக்க மறுத்து தடை விதிக்கிறார்கள். மாணவர்கள் திறந்த வெளியில் நிற்கிறீர்கள். அதனால் தான் நானும் திறந்த வெளியில் நின்று பேசுகிறேன்.



நாளைய பற்றிய சிந்தனையை மாணவர்கள் சிந்திக்க வேண்டும். அதை சொல்வதற்காகவே இங்கு உங்கள் முன் வந்திருக்கிறேன். இளைஞர்கள் சிந்திக்க வேண்டும். இளைஞர்கள் பங்கு அரசியலுக்கு தேவை.

நான் மட்டும் அரசியலுக்கு வந்தால் போதாது. மாணவர்களாகிய நீங்களும் அரசியலுக்கு வர வேண்டும். என் மக்கள், என் தமிழகம் என்று அனைவரும் நினைத்து பாடுபட வேண்டும்.

மாணவர்கள் அரசியல் புரிந்து கொள்வார்கள் என்று அரசியல்வாதிகளுக்கு பயம் வந்து விட்டது. நாளைய தமிழகத்தை உருவாக்கும் வலிமை உங்களிடம் உள்ளது. அதனை மறந்து விடாதீர்கள்.

நேரில் உங்களையெல்லாம் சந்திக்கும் இந்த மகிழ்ச்சி டி.வி.யில் கிடைக்காது. வெயிலில் நிற்கும் இந்த அன்பு உன்னதமானது. பிக்பாசும், சினிமாவும் எனக்கு புகழை தேடி தரலாம். ஆனால் நேரில் இங்கே வந்திருக்கும் இந்த மக்கள் கூட்டம் தான் எனக்கு அன்பை தருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பொன்னிவாடி எல்லப்பாளையம் சென்றார். அங்குள்ள நல்ல தங்காள் அணையில் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசும் போது, தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம சபை உள்ளது. கிராம சபை குறித்து மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

நான் மட்டும் லஞ்சத்தை ஒழிக்க வரவில்லை. உங்களுடன் இணைந்து லஞ்சத்தை ஒழிக்க வந்துள்ளேன். நீங்கள் சேர்ந்தால் தான் லஞ்சத்தை ஒழிக்க முடியும் என்றார்.


Tags:    

Similar News