செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி 95 சதவீதம் நிறைவு - ஜெயக்குமார் பேட்டி

Published On 2018-09-07 10:51 GMT   |   Update On 2018-09-07 10:51 GMT
டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணி 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்:

தஞ்சையில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெல்டா மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் தூர்வாரும் பணி நடந்துள்ளது. இதில் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டது. மீதியுள்ள 5 சதவீத பணிகளும் விரைந்து முடிக்கப்படும்.

குட்கா விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் தப்ப முடியாது. இதில் தவறு இருந்தால் சட்டத்தின் வழிமுறையின்படி செயல் படுத்தப்படும். தவறு செய்தவர்கள் தான் கவலைப்பட வேண்டும்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, டி.டி.வி. தினகரனை கெட்டவன் என்று முடிவு செய்து ஒதுக்கி வைத்தார். அவரை வீட்டில் சேர்க்கவில்லை. தான் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பவர் தினகரன். பில்டப் செய்து சுற்றி சுற்றி வருகிறார். அவர் ஒரு காற்றுபோன வெற்று பலூன்.

அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களுடன் தான் உள்ளனர். 2021-ல் நடைபெறும் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும். டெல்டா மாவட்டங்களில் மக்கள் விரும்பாத திட்டங்களை அரசு ஆதரிக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது வைத்திலிங்கம் எம்.பி., பரசுராமன் எம்.பி. மற்றும் மாவட்ட பால்வள தலைவர் காந்தி, எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தராஜி, சேகர், மற்றும் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News