செய்திகள்
கோபிகிருஷ்ணன்

விபத்தில் மூளைசாவு அடைந்த மாணவனின் சிறுநீரகம்- கல்லீரல் 2 பேருக்கு பொருத்தப்பட்டது

Published On 2018-09-06 09:25 GMT   |   Update On 2018-09-06 09:25 GMT
திசையன்விளை அருகே விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவனின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பனைவிளையைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மாணிக்கவல்லி. இவர்களுடைய மகள்கள் ஞான ஜெயனி, ரீட்டா, மகன்கள் கிருஷ்ண பெருமான், கோபிகிருஷ்ணன் (வயது 16). இதில் கோபிகிருஷ்ணன் திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

அவர், கடந்த 26-ந்தேதி திசையன்விளையில் இருந்து உவரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள், அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோபி கிருஷ்ணன் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளை குலவணிகர்புரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோபி கிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்தார்.

இதுகுறித்து நெல்லை அரசு ஆஸ்பத்திரி டீன் கண்ணனுக்கு தெரிவிக்கப்பட்டது. அரசு டாக்டர்கள் 4 பேர் கொண்ட குழுவினர் கோபிகிருஷ்ணனை பரிசோதனை செய்தனர். அவர்கள், கோபிகிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனர்.

மாணவர் உடல் உறுப்புகள் பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்ட காட்சி.


இதையடுத்து கோபி கிருஷ்ணனின் பெற்றோர் தங்களது மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. கல்லீரல் பாதுகாப்பாக பெட்டியில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சிறுநீரகம் மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. கண்கள் நெல்லையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டன.

அங்கு உடல் உறுப்பு பொருத்தப்பட வேண்டிய நோயாளிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். கோவை தனியார் ஆஸ்பத்திரியில் 16 வயது இளம்பெண்ணுக்கு கல்லீரல் பொருத்தப்பட்டது. அதுபோல மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் ஒரு ஆண் நோயாளிக்கு சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து பலியான கோபிகிருஷ்ணனின் உடல் திசையன்விளை அருகே உள்ள பனைவிளைக்கு எடுத்துவரப்பட்டு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.
Tags:    

Similar News