செய்திகள்

கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி இந்த மாதம் முடியும் - அதிகாரிகள் தகவல்

Published On 2018-08-03 06:44 GMT   |   Update On 2018-08-03 06:44 GMT
ஊத்துக்கோட்டை அருகே கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிகள் 95 சதவீதம் முடிவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Kosasthalaiyarriver
ஊத்துக்கோட்டை:

பூண்டி , புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது.

இதில் பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பினால் ‌ஷட்டர்கள் வழியாக தண்ணீரை கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடப்படும் தண்ணீர் பூண்டி, ஆற்றம்பாக்கம், ஒதப்பை, சோமதேவன்பட்டு, கொரகண்தண்டலம், மோர், மெய்யூர், செம்பேடு, தாமரைபாக்கம், அணைக்கட்டு வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு அணை முழுவதுமாக நிரம்பியதால் அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது. மொத்தம் 30 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது.

இப்படி உபரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து விவசாயிகள் பயன்படும் விதத்திலும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்காகவும் தமிழக அரசு ஊத்துக்கோட்டை அருகே உள்ள ஒதப்பை பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்ட முடிவு செய்து ரூ. 7 கோடி ஒதுக்கியது.

இந்த நிதியை கொண்டு கொசஸ்தலை ஆற்றில் குறுக்கே 200 மீட்டர் நீளத்துக்கு தடுப்பு அணை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டன.

இந்நிலையில் பூண்டி நீர் பிடிப்பு பகுதி மற்றும் ஒதப்பை பகுதியில் செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்ததால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே நடந்து வந்த தடுப்பு அணை பணிகள் நிறுத்தப்பட்டன.

வெள்ள நீர் வடிந்த பிறகு கடந்த ஜனவரி மாதத்தில் தடுப்பு அணை கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கியது. இரவு-பகலாக தொடங்கியது பணிகள் நடந்து வருகின்றன. தற்போது கிட்டதட்ட 95 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுபற்றி அவர்கள் கூறும்போது, ‘‘மீதம் உள்ள 5 சதவீத பணிகள் இம்மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத இறுதியில் முடிந்த விடும். இதன் பின்னர் பருவ மழை மூலமாக ஆற்றில் பாயும் தண்ணீரை தடுப்பு அணையில் சேமித்து வைக்கலாம்’’ என்று கூறினர். #Kosasthalaiyarriver


Tags:    

Similar News