செய்திகள்

களக்காடு அருகே மண் ஏற்றி சென்ற டிராக்டர் மோதி பள்ளி மாணவி பலி

Published On 2018-08-03 05:43 GMT   |   Update On 2018-08-03 05:43 GMT
களக்காடு அருகே மண் ஏற்றி சென்ற டிராக்டர் மோதி பள்ளி மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

களக்காடு:

களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரத்தை சேர்ந்தவர் பிலமோன். இவரது மகள் பெனிட்டா(வயது13). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தாள். பெனிட்டா தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வது வழக்கம்.

களக்காடு சாலையில் பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் சிதம்பராபுரம் வழியாக சென்றுவருகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன. வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் பெனிட்டா இன்று காலை வழக்கம்போல சைக்கிளில் பள்ளிக்கு சென்றார். சிதம்பராபுரம் புதுதெரு ஆலமரம் பகுதியில் சென்றபோது எதிரே மண் ஏற்றிக்கொண்டு வேகமாக ஒரு டிராக்டர் வந்தது.

எதிர்பாராதவிதமாக டிராக்டர் பெனிட்டா மீது மோதியது. இதில் பெனிட்டா மீது டிராக்டர் சக்கரங்கள் ஏறின. இதில் பெனிட்டா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி ரத்தவெள்ளத்தில் பலியானாள்.

இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி போலீசார் டிராக்டர் ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News