செய்திகள்

பஸ்சில் அமர்ந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறிப்பு

Published On 2018-07-16 03:02 GMT   |   Update On 2018-07-16 03:02 GMT
சென்னை போரூர் அருகே பஸ்சில் சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்று பட்டப்பகலில் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி:

சென்னையை அடுத்த போரூர் ஏரிக்கரை அருகே, ஸ்ரீபெரும்புதூர் செல்லும் அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் ஜன்னலோர இருக்கையில் ஒரு பெண் நகை அணிந்து அமர்ந்து இருந்தார்.

இதை ஏற்கனவே நோட்டமிட்டவாறு 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் அந்த பஸ் நின்றது. அப்போது மோட்டார் சைக்கிளின் வேகத்தை குறைத்து, அதில் வந்த நபர்களில் ஒருவன் எழுந்து, அந்தப்பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தான். அதைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் அவர்கள் சிட்டாய் பறந்து விட்டனர்.

நகையைப் பறிகொடுத்த பெண், அலறித் தவித்தார்.

அந்தப் பெண் கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை சேர்ந்த பொற்செழியன் மனைவி சந்திரிகா (வயது 52) ஆவார். இவர் தனது மகனின் திருமணத்துக்கு சென்னையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்தவர் என தெரியவந்து உள்ளது.

கிண்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று அழைப்பிதழ் கொடுத்துவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள உறவினருக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக பஸ்சில் சென்றபோதுதான் இந்த நகை பறிப்பு சம்பவம் நடந்து உள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுவரை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் நடந்து செல்கிற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு, இரு சக்கர வாகனத்தில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு, வீட்டு வாசலில் கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு போன்ற சம்பவங்கள் நடந்து உள்ளன. பஸ்சின் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்த சம்பவம் புதிதாக அமைந்து உள்ளது. இது இனி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து செல்கிற பெண்கள் மிகவும் கவனமாகவும், உஷாராகவும் இருக்க வேண்டும் என்பதற்கு பாடமாக அமைந்து உள்ளது.

நகையை இழந்த சந்திரிகா, போரூர் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி, மோட்டார் சைக்கிளில் சென்று நகை பறித்த கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News