செய்திகள்

11, 12-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு தான் - அரசாணை வெளியீடு

Published On 2018-06-11 08:39 GMT   |   Update On 2018-06-11 08:39 GMT
11 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் மொழிப்பாடங்களுக்கு இனி 2 தனித்தனி தேர்வுகள் நடத்தப்படாது என்றும் ஒரே தேர்வாக நடத்தப்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. #TamilNaduGovt
சென்னை:

தமிழகத்தில் நீட் தேர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் கல்வி முறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு மாநில கல்வி முறை மேம்படுத்தப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து இருந்தார்.

அதன்படி, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம், 2-ம் இடம் போன்ற பாகுபாடுகள் இருக்க கூடாது உத்தரவிட்டார். மேலும், மாநில பாடத்திட்டத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் நடத்தப்படும் 2 தனித்தனி தேர்வுகள் இனி ஒரே தேர்வாக நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான பணியைத் தொடங்கியது. மாணவர்களின் சுமையையும், மன உளைச்சலையும் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.



அதன்படி இன்று இதுதொடபான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மொழிப்பாடங்களில் ஒரே தேர்வு மட்டுமே நடத்தப்படும் என்றும், இந்த தேர்வு முறை இந்த கல்வியாண்டில் இருந்தே பின்பற்றப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மொழிப்பாடங்களுக்காக மட்டும் 4 தேர்வுகள் (தமிழ்-2, ஆங்கிலம்-2) எழுதி வந்த நிலையில், இனி 2 தேர்வுகள் மட்டுமே எழுதவேண்டும்.

அரசின் இந்த அறிவிப்புக்கு கல்வியாளர்கள் பலர் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதே சமயம் மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் இலக்கணம் மீதான ஆர்வம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். #TamilNaduGovt
Tags:    

Similar News