செய்திகள்

மணல் குவாரிக்கு எதிர்ப்பு - கொசஸ்தலை ஆற்றில் இறங்கி பெண்கள் போராட்டம்

Published On 2018-06-04 06:22 GMT   |   Update On 2018-06-04 06:22 GMT
மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொசஸ்தலை ஆற்றில் இறங்கி பெண்கள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர்:

திருவாலங்காடு அருகே உள்ள லட்சுமி விலாசபுரம் கொசஸ்தலை ஆற்றில் குவாரி மூலம் மணல் எடுக்க அரசு அனுமதி அளித்து உள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பே இதனை தடை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்த குவாரியில் தற்போது மணல் அள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க கோரி மாவட்ட கலெக்டரிடம் தி.மு.க. எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் தலைமையில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மணல் எடுத்தால் லட்சுமி விலாசபுரம், பொன்னாங்குளம் மற்றும் பாகசாலை, குப்பம் கண்டிகை, மணவூர் போன்ற பகுதிகளில் நிலத்தடி நீர் வற்றி குடிநீர் பிரச்சினை ஏற்படும் என்றும் புகாரில் தெரிவித்திருந்தனர்.

எனினும் மணல் அள்ளுவதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை கொசஸ்தலை ஆற்றில் இறங்கி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்து ஜே.சி.பி. எந்திரத்தை சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன் மற்றும் திருவாலங்காடு போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்ந்து அங்கு பதட்டமான நிலை நீடிக்கிறது. இதனால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Tags:    

Similar News