செய்திகள்

மணல் குவாரி திறக்க எதிர்ப்பு - ஊத்துக்கோட்டையில் கடைகள் அடைப்பு, உண்ணாவிரதம்

Published On 2018-05-21 11:36 GMT   |   Update On 2018-05-21 11:36 GMT
ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள், விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆரணி ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரைகளில் 10-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் ஆழ்துளை கிணறுகளை அமைத்து குடிநீர் வினியோகித்து வருகிறது.

அனந்தேரி, போந்தவாக்கம், பேரிவிட்டிவாக்கம், மாம்பாகம், வேலகாபுரம், நந்திமங்கலம் உட்டபட 15 ஊராட்சிகளை ஆரணி ஆற்றங்கரையில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகித்து வருகின்றன.

இந்த நிலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு முடிவு செய்து ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளது.

இதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மணல் குவாரி அமைக்க கூடாது என்று கோரி ஊத்துக்கோட்டை பொது மக்கள் கடந்த வாரம் ஊத்துக்கோட்டை தாசில்தார் ரவிசந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதேபோல் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் மணல் குவாரி தொடங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே மணல் குவாரி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டையில் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மேலும் பொது மக்கள், விவசாயிகள் கிராம நிர்வாக அவுலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News