செய்திகள்

கடம்பத்தூரில் மின்சார ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

Published On 2018-05-09 08:41 GMT   |   Update On 2018-05-09 08:41 GMT
ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு இயக்கப்படாததால் கடம்பத்தூரில் மின்சார ரெயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம் நடத்தினர்.
திருவள்ளூர்:

அரக்கோணத்தில் ரெயில்வே பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதனால் அரக்கோணத்தில் இருந்து திருத்தணி, திருவள்ளூர் வழியாக சென்னை நோக்கி வரும் மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள் சேவை பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் ரெயில் சேவையிலும் பாதிப்பு உள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்கு ரெயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் ரெயில் சேவை பற்றி முறையான அறிவிப்பு இல்லை என்றும் பொது மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை கடம்பத்தூர் ரெயில் நிலையத்தில் சென்னை செல்வதற்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் வரை ரெயில் வரவில்லை. இதனால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர்.

நீண்ட நேரத்துக்கு பின்னர் அரக்கோணத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் மின்சார ரெயில் வந்தது. அதனை சுமார் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஜோலார் பேட்டையில் இருந்து சென்னை நோக்கி வந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலையும் மறித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து வந்த மின்சார ரெயில்கள், திருப்பதி நோக்கி சென்ற சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. செஞ்சி பனம்பாக்கத்தில் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டது.

ரெயில் மறியல் காரணமாக மூடப்பட்ட கடம்பத்தூர் ரெயில்வே கேட் நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சாலையின் இருபக்கமும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காஞ்சீபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பெருமாள், டி.எஸ்.பி. புகழேந்தி, திருவள்ளூர் டவுண் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடம் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் வழக்கம் போல் ரெயில்கள் புறப்பட்டு சென்றன.

Tags:    

Similar News