செய்திகள்
தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட வசந்தி.

உடுமலையில் தண்ணீரில் மூழ்கி 2 மகன்கள் பலியான அதிர்ச்சியில் தாய் தற்கொலை

Published On 2018-05-04 05:45 GMT   |   Update On 2018-05-04 05:45 GMT
உடுமலையில் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மகன்களின் பிரிவை தாங்கமுடியாமல் தாய் வசந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள மடத்துக்குளம் சாமிநாதபுரத்தை சேர்ந்தவர் கோதண்டராமன் (45). மில் தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (40). இவர்களுக்கு 4-ம் வகுப்பு படிக்கும் சுதர்சன் (9), 2-ம் வகுப்பு படிக்கும் ரோகித் (7) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் தற்போது விடுமுறையில் உள்ளனர்.

இந்த நிலையில் வசந்தியின் பெற்றோர் ஊரான தாந்தோணி என்ற கிராமத்தில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. பள்ளி விடுமுறையை கழிக்கவும் திருவிழாவில் கலந்து கொள்ளவும் சுதர்சன், ரோகித் 2 பேரையும் வசந்தி அனுப்பி வைத்தார். நேற்று சிறுவர்களின் தாத்தா ரங்கசாமி தோட்டத்தில் மாடுகளை கட்டிக்கொண்டு இருந்தார்.

அந்த நேரத்தில் 5 அடி ஆழமுள்ள பண்ணை குட்டை அருகே விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்களையும் திடீரென காணவில்லை. இதையடுத்து ரங்கசாமி மற்றும் அருகில் இருந்தவர்கள் தேடினர். அப்போது அவர்கள் பண்ணை குட்டையில் மூழ்கி பலியானது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விடுமுறையை கழிக்க ஊருக்கு சென்ற மகன்கள் பலியான தகவல் கிடைத்ததும் பெற்றோர் அலறியடித்து கொண்டு ஓடிவந்து மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

மகன்களின் பிரிவை தாங்கமுடியாத வசந்தி சோகத்தில் காணப்பட்டார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி தேற்றினர். இந்த நிலையில் இன்று அதிகாலை அனைவரும் தூங்கிய நேரத்தில் திடீரென எழுந்த வசந்தி மண் எண்ணெய் எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் வசந்தி பரிதாபமாக இறந்தார்.

மகன்களின் பிரிவை தாங்கமுடியாமல் வசந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News