செய்திகள்

ராமநாதபுரத்தில் தினகரன் கட்சி நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு: பதட்டம்- போலீஸ் குவிப்பு

Published On 2018-04-25 10:07 GMT   |   Update On 2018-04-25 10:07 GMT
ராமநாதபுரத்தில் இன்று காலை நடை பயிற்சி சென்ற தினகரன் கட்சி நிர்வாகியை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீஸ் குவிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் தவமுனியசாமி (வயது 49.) இவர் தற்போது தினகரன் கட்சியான அ.ம.மு.க.வின் வர்த்தக அணி மாவட்ட செயலாளராக உள்ளார்.

கட்சியில் தீவிரமாக செயல்பட்டு தவமுனியசாமி வீட்டின் மீது கடந்த சில வாரங்களுக்கு முன்பு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் தவமுனியசாமி இன்று காலை தனது வீட்டின் எதிரே மதுரை- ராமேஸ்வரம் நெடுஞ்சாலை யோரமுள்ள சிதம்பரம் பிள்ளை ஊரணியில் நடை பயிற்சி சென்றுகொண் டிருந்தார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திடீரென்று தவமுனியசாமியை மறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்த சிலர் உடனடியாக மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முன் விரோதம் காரணமாக தவமுனியசாமி வெட்டப்பட்டாரா? அல்லது வேறு காரணமா? என்ற கோணத்தில் ராமநாதபுரம் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த அ.ம.மு.க.வின் மாவட்ட செயலாளர் ஆனந்த் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி ஆஸ்பத்திரி முன்புள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் போலீஸ் டி.எஸ்.பி. நடராஜன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளர்.

Tags:    

Similar News