செய்திகள்

கவர்னர் மாளிகை முன் முற்றுகை - கம்யூனிஸ்டு கட்சியினர் 200 பேர் கைது

Published On 2018-04-25 09:08 GMT   |   Update On 2018-04-25 09:55 GMT
கவர்னர் மாளிகை முன் முற்றுகை போராட்டம் நடத்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை:

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி தனது கல்லூரி மாணவிகளை பாலியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் செயல்பட்டதன் விளைவாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தானே முன் வந்து ஒரு விசாரணை குழுவை அமைப்பது உண்மைகளை மூடிமறைக்கும் செயலானது. இதில் கவர்னருக்கு தொடர்பு உள்ளது.

எனவே கவர்னரை மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும் எனக்கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு சைதாப்பேட்டை சின்னமலை அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் 200 பேர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் ஊர்வலமாக கவர்னர் மாளிகை நோக்கி புறப்பட்டனர். ‘திரும்பபெறு திரும்பபெறு கவர்னரை திரும்பபெறு என்ற கோ‌ஷங்களுடன் மத்திய அரசை வலியுறுத்தினார்கள். அப்போது அங்கு போலீசார் தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து கைது செய்தனர்.

ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, தென் சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம், முன்னாள் எம்.எல்.ஏ. பாக்கியம், வட சென்னை செயலாளர் எல்.சுந்தர் ராஜன் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை கிண்டியில் உள்ள ரேஸ்கோஸ் மைதானத்தில் அடைத்து வைத்தனர். #tamilnews

Tags:    

Similar News