செய்திகள்

போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

Published On 2018-04-25 08:57 GMT   |   Update On 2018-04-25 08:57 GMT
போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #Intermediateteachers

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரே பணிக்கு ஒரே ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டுள்ள உண்ணா நிலைப் போராட்டம் மூன்றாவது நாளை எட்டியிருக்கிறது. ஆனால், அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு காட்டும் அலட்சியமும், ஆணவமும் கண்டிக்கத்தக்கவை.

தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

2009 மே 31-ந் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் ரூ.2,800 தர ஊதியம் மற்றும் படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன்பிறகு, அதாவது 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிகவும் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதனால், 2009 மே மாதத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து படிகளுடன் சேர்த்து ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதன்பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.26,500 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் இடைவெளிக்காக மாத ஊதியத்தில் ரூ.15,500 குறைத்து வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது.

ஆசிரியர்களின் கோரிக்கை நியாயமாக உள்ள நிலையில், அவற்றை நிறைவேற்றுவது தான் அரசின் பணியாகும். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்பதற்குக் கூட தமிழக அரசு தயாராக இல்லை. ஆசிரியர்களுடன் இரு முறை பெயரளவில் பேச்சு நடத்திய தமிழக அரசு, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து விட்டது.

ஆசிரியர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் கோரிக்கை சிக்கலானதாக இருந்தால், அதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யலாம். ஆனால், 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய அளவில் துரோகம் இழைக்கப்பட்டிருப்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது.

மாறாக அவர்கள் கேட்டும் நிறைவேற்றாமல், ஆசிரியர்களை போராட்டம் நடத்தும் சூழலுக்கு ஆட்சியாளர்கள் தள்ளியிருப்பது அரசுக்கு அவமானம் ஆகும். இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அதன்மூலம் இவ்வி‌ஷயத்தில் ஏற்பட்டுள்ள அவப்பெயரை அரசு போக்கிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #Intermediateteachers

Tags:    

Similar News