செய்திகள்

கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-04-10 05:11 GMT   |   Update On 2018-04-10 05:11 GMT
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கான பல கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தேர்தல் ஆணையரால் வெளியிடப்பட்டது. இந்த தேர்தலுக்கு முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோர் மாநில பொறுப்பாளர்களாகவும், அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இவர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஆளுங்கட்சியினரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர். எதிர்க்கட்சியினரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. பலருடைய மனுக்களை தள்ளுபடி செய்து அ.தி.மு.க.வினரை மட்டும் தேர்வு செய்துள்ளனர். பல இடங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலேயே சங்க நிர்வாகிகள், உறுப்பினர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தேர்தலில் பெரும்பாலும் ஆளுங்கட்சியினரை தேர்வு செய்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அடுத்தகட்ட தேர்தலுக்கு தயாராகி உள்ளனர். விதிமீறல்களும், முறைகேடுகளும் நடப்பது தெரிந்தும், புகார்கள் வந்தும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக கடந்த மார்ச் 5-ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பும், அதன்படி நடந்த தேர்தல்களும் சட்டவிரோதம். அந்த நடவடிக்கைகள் செல்லாது என்று அறிவித்து, சட்டவிதிகளுக்கு உட்பட்டு முறையாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர்அகமது ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் வீராகதிரவன், “தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று வாதாடினார்.

பின்னர் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “கூட்டுறவு சங்க தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி நடந்து வருகின்றன. விதிமீறல்கள் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் பேரில் சமீபத்தில் 142 சங்கங்களின் தேர்தல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சட்டப்படி தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று வாதாடினார்.

விசாரணை முடிவில் நீதிபதிகள், “கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும். வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது பற்றிய விவரங்களையும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான மாநில தேர்தல் கமிஷனர் விரிவான பதில் மனுவை வருகிற 11-ந் தேதி (அதாவது நாளை) தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

பின்னர் இந்த வழக்கை 11-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

கூட்டுறவு தேர்தல் நடவடிக்கைகளில் தற்போதைய நிலை தொடர, ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருப்பதன் மூலம் மேற்கொண்டு தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews
Tags:    

Similar News