செய்திகள்

நீர் ஆதாரங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது - கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தல்

Published On 2018-03-24 09:56 GMT   |   Update On 2018-03-24 09:56 GMT
நீராதார பகுதிகளில் யாராவது அசுத்தம் செய்தால் அவர்களை பொதுமக்கள் எச்சரிக்க வேண்டும் என்று கவர்னர் கிரண்பேடி அறிவுறுத்தினார்.
திருக்கனூர்:

கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பல்வேறு இடங்களுக்கு சென்று திட்ட பணிகளை ஆய்வு செய்து வருகிறார்.

அதோடு நீராதார இடங்களை பார்வையிட்டு அதனை செப்பனிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார்.

அதுபோல் இன்று காலை கவர்னர் கிரண் பேடி திருக்கனூர் அருகே கூனிச்சம்பட்டு- மணலிப் பட்டு இடையேயான சங்கராபரணி ஆற்றை பார்வையிட வந்தார். அவரை மண்ணாடிப்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. டி.பி.ஆர். செல்வம் வரவேற்றார்.

அங்குள்ள படுகை அணையுடன் கூடிய மேம்பாலத்தை பார்வையிட்ட கவர்னர் கிரண்பேடி அணையில் தண்ணீர் தேக்கி வைப்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். பின்னர் மேம்பால கட்டையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நலத்திட்ட பணிகளை நிறைவேற்ற பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்போதுதான் திட்டப்பணி முழுமையாக மக்களை சென்றடையும்.

நீராதாரங்களில் பொது மக்கள் குப்பைகளை கொட்டக்கூடாது. நீரா தாரங்களை சேமித்தால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது.

அது போல் நீராதார பகுதிகளில் யாராவது அசுத்தம் செய்தால் அவர்களை பொதுமக்கள் எச்சரிக்க வேண்டும். சங்கராபரணி ஆற்றை கழிப்பறையாக பயன்படுத்த கூடாது. தனி நபர் கழிவறை கட்ட அரசு மானியம் வழங்குகிறது. அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வீடுகளில் கழிவறை கட்டிக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கவர்னர் கிரண்பேடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஊர் பிரமுகர்கள் ஞானசேகர், கே.வி.ஆர். கலியபெருமாள், மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சீத்தாராமன் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். #tamilnews

Tags:    

Similar News