செய்திகள்

பாரதியார் பல்கலைகழக தொலைதூர கல்வி இயக்குனருக்கு அனுமதி மறுப்பு

Published On 2018-03-23 09:44 GMT   |   Update On 2018-03-23 09:44 GMT
1½ மாத மருத்துவ விடுப்புக்கு பிறகு மீண்டும் பணியில் சேர வந்த பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
வடவள்ளி:

கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர் கடந்த மாதம் 3-ந் தேதி லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் மனிதவள மேம்பாட்டுத்துறை மைய இயக்குனர் மதிவாணன் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவர் தொலை தூர கல்வி மைய இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்.

தன் மீது வழக்குபதிவு செய்யப்பட்டதையடுத்து மதிவாணன் ஒன்றரை மாத மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் இயக்குனர் பொறுப்பு பறிக்கப்பட்டது.

இந்தநிலையில் மருத்துவ விடுப்பு முடிந்து மதிவாணன் மீண்டும் பணியில் சேர வந்தார். அப்போது பல்கலைக்கழக நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

மீண்டும் பணியில் சேர அனுமதிப்பது குறித்து உயர்கல்வித் துறை முதன்மை செயலாளரிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும் என பல்கலைக்கழக நிர்வாக அதிகாரிகள், மதிவாணனிடம் கூறினர்.

இதையடுத்து அவர் மேலும் 1 வாரம் மருத்துவ விடுப்பை நீட்டித்து சென்று விட்டார். இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளர் வனிதா கூறியதாவது:-

சாதாரண சூழலில் மருத்துவ விடுப்பில் சென்றிருந்தால் மீண்டும் பணியில் சேர்க்க எந்த தடையும் கிடையாது. ஆனால் லஞ்ச வழக்கில் இடம் பெற்றிருப்பதால் மேற்கொண்டு எவ்வித செயல்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்ற குழப்பம் உள்ளது. சட்டரீதியான தகவல்களை பெற்று, முதன்மை செயலாளரிடம் ஆலோசனை மேற்கொண்ட பிறகே, அவரது நிலைப்பாட்டை இறுதி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
Tags:    

Similar News