செய்திகள்

புதையல் தங்கம் எனக்கூறி கவரிங் நகை விற்பனை - சேலம் பெண்கள் குழந்தையுடன் கைது

Published On 2018-03-19 08:21 GMT   |   Update On 2018-03-19 08:21 GMT
ஜோலார்பேட்டையில் புதையல் தங்கம் எனக்கூறி கவரிங் நகை விற்பனை செய்த சேலம் பெண்களை குழந்தையுடன் போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக போலி மற்றும் கவரிங் நகைகளை நூதன முறையில் விற்பனை செய்யும் பெண்கள் கும்பல், கும்பலாக சுற்றித் திரிகின்றனர்.

கைக்குழந்தையுடன் பிச்சை கேட்பது போல் வலம் வரும் பெண்கள் நோட்டமிட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

வேலூரில் புதையல் எனக்கூறி கவரிங் நகைகளை விற்பனை செய்த பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

வேலூர் சம்பத் நகரை சேர்ந்தவர் பட்டு (வயது40) நேற்று வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு கைக்குழுந்தையுடன் 2 பெண்கள் வந்தனர். அவர்கள் பட்டுவிடம் பேச்சு கொடுத்தனர். எங்களிடம் புதையல் நகைகள் உள்ளன. ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தாலி செயினில் பயன்படுத்தப்படும் கால்காசு, ஞானகுழல் தருகிறோம் என்றனர்.

அப்போது பட்டு ரூ.1700 மட்டுமே இருப்பதாக கூறினார். அந்த பணத்திற்கு ஒரு ஞானகுழல் கொடுத்தனர். அதனை வாங்கிய பிறகுதான் அது கவரிங் என்பது தெரியவந்தது. இது பற்றி பட்டு வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் வந்து கவரிங் நகை விற்ற 2 பெண்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

இதில் அவர்கள் சேலம் மாவட்டம் கொண்டாலம் பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் மனைவிமீனாட்சி, (27), அவரது தம்பி மனைவி தமிழ்ச்செல்வி (20) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்ச்செல்வியின் 2 வயது பெண் குழந்தை உள்பட 3 பேரையும் வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.

இது போன்ற நகைகள் விற்பனை செய்யும் பெண்கள் வந்தால் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

ஜோலார்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் போலீசார் நேற்று ஜோலார்பேட்டையில் மக்கள் அதிகம் கூடும் ஓட்டல் தெருவில் ரோந்து பணிவில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 3 பெண்களை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அதில், அவர்கள் மூவரும் சேலத்தை சேர்ந்த தனலட்சுமி (38), ருக்கு (36), சங்கரி (37), ஆகியோர் என்றும், வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நைசாக பேசி கவரிங் நகையை மாற்றி தருகிறோம் என்று கூறி கணிசமான ஒரு தொகையை பறிக்கும் கும்பல் என்று தெரிய வந்தது.

மேலும், இவர்கள் மீது சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேசன்களில் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

நேற்று ஜோலார்பேட்டை பகுதிகளில் மோசடியில் ஈடுபட சேலத்தில் இருந்து ரெயில் மூலம் வந்ததாக தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்து திருப்பத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews

Tags:    

Similar News