செய்திகள்

ராகுல்காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்- கந்தசாமி பேச்சு

Published On 2018-03-16 09:58 GMT   |   Update On 2018-03-16 09:58 GMT
மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று அமைச்சர் கந்தசாமி பேசியுள்ளார்.

பாகூர்:

புதுவை மணவெளி தொகுதி டி.என்.பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், புதுவை நுகர்வோர் எதிரொலி, புதுவை அரசு குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை ஆகியவை இணைந்து உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவை நடத்தியது.

இந்நிகழ்ச்சிக்கு புதுவை நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

சமூக ஆர்வலர் ராமலிங்கம், தபால்துறை முன்னாள் அதிகாரி ராஜாராம், ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் மதனம் ஆகியோர் சிறப் புரையாற்றினர். பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாணவர்களிடையே பேச்சு, கட்டுரை, கவிதை மற்றும் வாசகம் எழுதுதல் போன்ற போட்டிகள் நடந் தப்பட்டு பரிசுகளை அமைச்சர் கந்தசாமி வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

நமது நாட்டில் தரமாக பொருட்களை வாங்குவதற்கு சட்டம் உள்ளது. இச்சட்டத்தை பயன்படுத்தி உங்களது உரிமையை பெற்றுக் கொள்ளலாம்.

நமது மாநிலத்தில் நிதி தட்டுப்பாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அதனையும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு அவ்வப்போது மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.

நமது மாநிலத்தில் தற்போது வியாபாரம், தொழிற்சாலை, விவசாயம் போன்றவைகள் சரிவர செயல்படாததால் வருவாய் குறைந்துள்ளது. மேலும் பத்திரப்பதிவு தடை, ஜி.எஸ்.டி. வரி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் அகற்றம் போன்றவற்றால் மாநிலத்தின் வருவாய் வருடத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி குறைந்துள்ளது.

7-வது சம்பள உயர்வு வழங்க மாநில நிதியில் இருந்து 50 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ரூ.1500 கோடி கடனை திரும்ப செலுத்த வேண்டிய நிலையிலும் நமது மாநில அரசு உள்ளது.

மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1500 கோடியை இதுவரை பெற முடியாமல் இருந்து வருகிறது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும் போது 70 சதவீதம் மானியம் வழங்கியது.

ஆனால், தற்போதுள்ள பா.ஜனதா அரசு 27 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. மீதி 73 சதவீதத்தை மாநிலத்திலேயே வருவாய் பெறவேண்டிய நிலை உள்ளது. வருவாயை பெருக்க புதிய திட்டங்கள் கொண்டு வர ஏற்பாடு செய்ப்பட்டு வருகிறது.

முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்த ஜிப்மர் மருத்துவமனைக்கு உடல் உறுப்பு மாற்றம் செய்வதற்காக சேதராப்பட்டு பகுதியில் 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

புதுவையில் விமான சேவை, ரெயில் சேவை அதிகரிப்பு மற்றும் துறைமுகம் போன்ற பல முக்கிய திட்டங்கள் இந்த ஆட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த எம்.பி. இடைத் தேர்தலில் பாரதீய ஜனதா தோல்வி அடைந்துள்ளது. மீண்டும் காங்கிரஸ் அலை அனைத்து பகுதிகளிலும் வீசும் நிலை விரைவில் வரும்.

மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமையும். அதனால் நமது மாநிலத்துக்கு பல நலத்திட்டங்கள் செயல் படுத்தப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முடிவில் நுகர்வோர் எதிரொலி தலைவர் வீரசேகரன் நன்றி கூறினார். முன்னதாக பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் இலவச கண் பரிசோதனை முகாமும் நடந்தது.

மேலும் சூற்றுச்சூழல் துறை எடைகள் மற்றும் அளவைகள் துறை அதிகாரிகள், ஊர் முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். #tamilnews

Tags:    

Similar News