செய்திகள்

கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

Published On 2018-03-16 05:08 GMT   |   Update On 2018-03-16 05:08 GMT
சாதிசான்றிதழ் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தில் விடிய விடிய காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, வானரமுட்டி, நாலாட்டின்புதூர், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், எப்போதும்வென்றான் ஆகிய பகுதிகளில் வாழும் காட்டு நாயக்கன் சமுதாய மக்களுக்கு பழங்குடியினர் இனச்சான்று வழங்க கோரி அச்சமுதாய மக்கள் பலமுறை விண்ணப்பித்தும், சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இதுபற்றி கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவிட்ட பின்னரும், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் வட்டாட்சியர் விசாரணை முடிந்த பிறகும், சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தினால், சான்றிதழ் கிடைக்கவில்லை.

குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் சான்றிதழ் இல்லாமல் எவ்வித சலுகையும் பெறமுடியாமல், வேலை வாய்ப்புக்கும், மேல் கல்விக்கும் செல்ல முடியாத நிலை உள்ளதால் உடனடியாக சாதிசான்றிதழ் வழங்க வலியுறுத்தினர். இதையடுத்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து சப்-கலெக்டர் அனிதா மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகும் உடன்பாடு ஏற்படவில்லை. சான்றிதழ் கிடைக்கும் வரை போராட்டத்தினை கைவிட போவதில்லை என்று கூறி தொடர்ந்து அதிகாலை வரை காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மீண்டும் சப்-கலெக்டர் அனிதா, டி.எஸ்.பி.ஜெபராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதற்கட்டமாக 7 பேருக்கு சாதிச்சான்றிதழ் வழங்கினர். மேலும் விண்ணப்பம் செய்தவர்கள் மனுக்கள் மீது ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு விரைந்து வழங்கப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் போராட்டத்தினை அதிகாலையில் கைவிட்டனர்.

முன்னதாக போராட்டத்தில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான டில்லிபாபு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, நகரக்குழு உறுப்பினர் சக்திவேல்முருகன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசுப்பு, கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன்ராஜ், விஜயலட்சுமி, கிருஷ்ணவேனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  #tamilnews
Tags:    

Similar News