செய்திகள்

நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிற துணி போர்த்தியதால் பரபரப்பு

Published On 2018-03-16 03:23 GMT   |   Update On 2018-03-16 03:23 GMT
நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிற துணி போர்த்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:

நாமக்கல் மெயின் ரோட்டில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் சிலைகள் உள்ளன. இந்த 3 சிலைகளும் அ.தி.மு.க சார்பில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த சிலைகளுக்கு நேற்று மர்ம நபர்கள் சிலர் திடீரென காவி நிற துணியை போர்த்தியதோடு மாலை அணிவித்து சென்று விட்டனர்.

சமீபத்தில் பெரியார் சிலை குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா முகநூலில் பதிவு செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எச்.ராஜாவிற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.

இந்த நிலையில் பெரியார், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி நிற துணி போர்த்தப்பட்ட சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லில் பெரியார் சிலைக்கு காவி நிற துணி போர்த்தப்பட்டது மனவேதனை அளிப்பதாக மக்கள் உரிமை கழகத்தினர் தெரிவித்தனர்.

மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இதற்கிடையே தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளில் இருந்த காவிநிற துணிகளை அகற்றினர். #tamilnews

Tags:    

Similar News