செய்திகள்

கிரானைட் முறைகேடு: தனியார் நிறுவனங்களின் ரூ. 38 கோடி சொத்துக்கள் முடக்கம்

Published On 2018-03-02 04:37 GMT   |   Update On 2018-03-02 04:37 GMT
கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த 2 நிறுவனங்களின் ரூ. 38 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

மதுரை:

மதுரை மேலூர், மதுரை கிழக்கு பகுதியில் சுமார் 194 தனியார் கிரானைட் குவாரிகள் செயல்பட்டு வந்தன. இந்த குவாரிகளில் பெரும்பாலானவை அரசின் விதி முறைகளை மீறியும், அரசு நிலங்களை ஆக்கிரமித்தும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு விதிமுறை மீறலில் ஈடுபட்ட 84 குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. போலீசாரும் இந்த நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளின் விசாரணை மதுரை மேலூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதில் மதுரையைச் சேர்ந்த பெரிகருப்பன், அவரது குடும்பத்தினர் பாலகிருஷ்ணன், சுப்பையா நடத்தும் குமார் கிரானைட், குமார் ஏற்றுமதி நிறுவனம் ஆகியவை மதுரை சுற்றுப்புற பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பல்வேறு வண்ணங்கள் கொண்ட கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், கிரானைட் கற்களை விதிமுறைகளை மீறி கனரக எந்திரங்கள் மூலமும் அதிக சக்தி கொண்ட வெடிகள் மூலம் தகர்த்து எடுத்ததாகவும் புகார் கூறப்பட்டது.

மேலும் வெட்டி எடுக்கப்பட்ட கிரானைட் கற்களை பதுக்கி வைத்து உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் விற்று அதிக அளவில் லாபம் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக இந்த 2 நிறுவனங்கள் மீதும் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை மேலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

சமீபத்தில் இந்த 2 நிறுவனங்களின் மீதும் குற்றப்பத்திரிகைகளை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து முறைகேடான வழியில் அரசு சொத்துக்களை அபகரித்து பணம் ஈட்டிய இந்த 2 நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குமாறு தமிழக காவல்துறை, அமலாக்கத்துறைக்கு பரிந்துரை செய்தது.

அதன் அடிப்படையிலும், பண மோசடி சட்டத்தின் கீழும் 2 நிறுவனங்களுக்கும் சொந்தமான ரூ. 37.79 கோடி மதிப்புள்ள 158 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

இந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News