செய்திகள்

தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

Published On 2018-02-24 13:37 GMT   |   Update On 2018-02-24 13:37 GMT
அம்மா ஸ்கூட்டர் திட்டம் அறிமுக விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி பேசுகையில், தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன் என கூறினார். #PMModi #AmmaTwoWheelerScheme

சென்னை:

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளான இன்று, தமிழ்நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்கள் இருசக்கர வாகனங்கள் வாங்க மானியம் வழங்கும் ’அம்மா ஸ்கூட்டர் திட்டம்’ அறிமுக விழாவில் பிரதமர் மோடி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர்களை வழங்கினார். 



அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

தமிழுக்கும், தமிழ் பாரம்பரியத்திற்கும் நான் தலைவணங்குகிறேன். அன்புமிக்க சகோதர சகோதரிகளே வணக்கம். மகாகவி பாரதியாரின் மண்ணில் நிற்பதற்கு பெருமைபடுகிறேன். ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டதைவிட இப்போது கூடுதல் நிதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஏராளமான நிதி வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் பெண்கள் பயன்பெறுகின்றனர். பெண்களின் கல்விக்கு உதவும்போது அவர்களில் மொத்த குடும்பமும் பயன்பெறுகிறது.

சுயவேலைவாய்ப்பு (முத்ரா யோஜனா) திட்டத்தில் பலனடைந்தவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள். பெண்களுக்கான மகப்பேறு விடுமுறையை 26 வாரங்களாக அதிகரித்து தந்துள்ளோம். உஜ்வாலா திட்டத்தில் 3.5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உஜாலா திட்டத்தின் மூலமாக கரியமில வாயு மாசு குறைந்துள்ளது. அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாமானியர்களுக்கு அதிகாரமளித்தலை முதன்மை நோக்கமாக கொண்டு மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. சுகாதாரம், விவசாயிகள் நலன் ஆகியவற்றை இலக்காக வைத்து மத்திய அரசு செயல்படுகிறது. மகளிருக்கான வாகனம் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் பயன்தரும். சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கு தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகள் பலனடைந்துள்ளனர். எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாநில அரசுடன் இணைந்து உயர்த்துகிறோம்.

இவ்வாறு மோடி பேசினார். #PMModi #AmmaTwoWheelerScheme #AmmaTwoWheeler #tamilnews
Tags:    

Similar News