செய்திகள்
மனோகரன்

திருவையாறு அருகே 15 ஆண்டுகளாக கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

Published On 2018-02-23 04:10 GMT   |   Update On 2018-02-23 04:10 GMT
திருவையாறு அருகே 15 ஆண்டுகளாக மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருவையாறு:

தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த மேல திருப்பந்துருத்தி தெற்கு குருசாமி மடத்தெருவை சேர்ந்தவர் மனோகரன் (வயது 63) இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வந்தார். இவர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெயசேகரின் அறிவுறுத்தலின் பேரில் துணை இயக்குனர் (தொழு நோய்) ஆர்.குணசீலன், திருவையாறு அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் மோகன் ராஜ், மருத்துவ ஆய்வாளர் சுபாஷினி ஆகியோர் அடங்கிய குழுவினர் மனோகரன் நடத்திவந்த கிளினிக்கில் திடீர் ஆய்வு நடத்தினர்.

அப்போது அவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்து விட்டு அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதும், நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரை கொடுத்து ஊசி போட்டு குளுக்கோஸ் ஏற்றி வருவதும் தெரியவந்தது.

மருத்துவம் படிக்காமல் மருத்துவ சிகிச்சை அளித்து வந்த மனோகரனை அதிகாரிகள் குழுவினர் பிடித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோகரனை கைது செய்தனர்.

கைதான போலி டாக்டர் மனோகரன், அப்பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்து வந்தது குறிப்பிடத்தக்கது. #Tamilnews
Tags:    

Similar News