செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவில் தக்காராக இரா.கண்ணன் ஆதித்தன் பதவியேற்பு

Published On 2018-02-19 08:07 GMT   |   Update On 2018-02-19 08:07 GMT
திருச்செந்தூர் முருகன் கோவிலின் புதிய தக்காராக மாலைமுரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
திருச்செந்தூர்:

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடாக திகழ்வது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா, வைகாசி விசாகம், ஆவணி திருவிழா, மாசித் திருவிழா ஆகிய திருவிழாக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

சூரனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் என்பதால் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நடக்கும் சூரசம் ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு திரள்வார்கள். இத்தகைய சிறப்புவாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தக்காராக பி.டி.கோட்டை மணிகண்டன் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு புதிய தக்காராக ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தனை நியமித்து தமிழக அரசு கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டது. அவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்காராக இன்று (திங்கட்கிழமை) பதவியேற்றுக்கொண்டார்.

கோவிலின் இணை ஆணையர் அலுவலகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. தக்காராக பதவியேற்று கொண்ட ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தனிடம், முன்னாள் தக்கார் கோட்டை மணிகண்டன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

பின்னர் இரா.கண்ணன் ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தக்காராக என்னை நியமித்ததற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். திருச்செந்தூர் கோவிலுக்கு எங்களது தாத்தா காலத்தில் இருந்தே திருப்பணிகள் செய்து வருகிறோம்.

அந்த வகையில் என்னை தக்காராக நியமித்து திருப்பணிகள் செய்ய வாய்ப்பு கொடுத்த முருகப்பெருமானுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் தேவையை அறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்போம்.

இவ்வாறு இரா.கண்ணன் ஆதித்தன் கூறினார்.

தொடர்ந்து கிரிபிர காரத்தில் கல்மண்டபம் அமைக்கப்படுமா? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, ‘முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று இரா. கண்ணன் ஆதித்தன் கூறினார்.

பதவியேற்பு நிகழ்ச்சியில் திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் பாரதி, முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன், காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார் டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், கல்வீடு முருகன் ஆதித்தன், பாலசுப்பிரமணிய ஆதித்தன், தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், குமரகுருபர ஆதித்தன், ராகவ ஆதித்தன், திருச்செந்தூர் கோவில் அலுவலக கண்காணிப்பாளர் யக்ஞ நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ‘மாலைமுரசு’ நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் காயாமொழியில் உள்ள முப்புராதி அம்மன் கோவிலில் சாமி தரிதனம் செய்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News