செய்திகள்

கேரளாவில் பந்த் அறிவிப்பு: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிப்பு

Published On 2018-01-23 09:07 GMT   |   Update On 2018-01-23 09:07 GMT
கேரளாவில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒட்டன்சத்திரம்:

தென்தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாக விளங்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது. தினசரி ரூ.5 கோடிக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

பண்டிகை நாட்களில் கூடுதலாக காய்கறிகள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இங்கிருந்து அதிக அளவில் கேரளாவிற்குதான் காய்கறிகள் அனுப்பப்படுகிறது. கேரள மாநிலத்தின் 70 சதவீத காய்கறிகள் தேவையை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டே பூர்த்தி செய்கிறது.

மத்திய அரசுக்கு எதிராக கேரளாவில் நாளை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் இயக்கப்படாத நிலை உள்ளது.

இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வந்த விவசாயிகளிடம் நேற்றே காய்கறிகள் கொண்டு வரவேண்டாம் என வியாபாரிகள் தெரிவித்து விட்டனர். இதன் காரணமாக இன்று காய்கறிகள் வரத்து அடியோடு குறைந்தது.

கேரளாவிற்கு எந்த லாரிகளும் காய்கறிகளை கொண்டு செல்லவில்லை. இதன் காரணமாக சுமார் ரூ.5 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சென்னை மற்றும் கோவை உள்பட சில நகரங்களுக்கு மட்டும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக இயங்கும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட் இன்று களைஇழந்து காணப்பட்டது.
Tags:    

Similar News