செய்திகள்

அரசுப்பேருந்து டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு - நாளை முதல் அமலுக்கு வருகிறது

Published On 2018-01-19 14:32 GMT   |   Update On 2018-01-19 14:35 GMT
தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNSTC #SETC #Busfarehike

சென்னை:

தமிழக அரசுக்கு சொந்தமான பேருந்துகளின் கட்டணங்களை உயர்த்தி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பின்படி, நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகர பேருந்துகளுக்கான அதிகபட்ச கட்டணம் 12 ரூபாயில் இருந்து 19 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்ச கட்டணம் 23 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



மலைப்பகுதிகளில் அடிப்படை பேருந்து கட்டணத்துடன் 20 சதவிகிதம் அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. விரைவு பேருந்தில் 30 கி.மீ.க்கு தற்போதைய கட்டணம் ரூ.17 ஆக இருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணம் ரூ.24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதிநவீன சொகுசு இடைநில்லா பேருந்து மற்றும் புறவழிச்சாலை இயக்க பேருந்து கட்டணம் 30 கி.மீக்கு ரூ.18லிருந்து ரூ.27 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வால்வோ பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.33ல் இருந்து ரூ.51 ஆக உயர்கிறது.



இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்துகளுக்கும் இந்த கட்டண உயர்வு செல்லும் என கூறப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வின்படி சுங்க வரி மற்றும் விபத்து காப்பீட்டு வரியும் பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட உள்ளது. #TNSTC #SETC #Busfarehike #tamilnews
Tags:    

Similar News