செய்திகள்

இறுதி பட்டியல் வெளியீடு: மதுரை மாவட்டத்தில் 25 லட்சம் வாக்காளர்கள்

Published On 2018-01-10 10:38 GMT   |   Update On 2018-01-10 10:38 GMT
மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 1.1.2018 தேதியினை அடிப்படையாக கொண்டு 10 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.
மதுரை:

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று 1.1.2018 தேதியினை அடிப்படையாக கொண்டு 10 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை கலெக்டர் வீரராகவராவ் வெளியிட்டார்.

மதுரை மாவட்டத்தில் 12 லட்சத்து 40 ஆயிரத்து 715 ஆண் வாக்காளர்களும், 12 லட்சத்து 67 ஆயிரத்து 847 பெண் வாக்காளர்களும், இதரர் 113 பேரும் என மொத்தம் 25 லட்சத்து 8 ஆயிரத்து 675 வாக்காளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் ஆண்களை விட 27 ஆயிரத்து 132 பெண்கள் அதிகம் உள்ளனர்.

இறுதி பட்டியலை வெளியிட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:-

1.1.2018-ந் தேதியினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை மேற்கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டதன் அடிப்படையில் கடந்த 3.10.2017 அன்று மதுரை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் பிறகு 3.10.2017 முதல் 15.12.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கவும், நீக்கம் மற்றும் திருத்தம் செய்யவும், தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திடவும் மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு, கணினியில் உரிய பதிவுகள் செய்யப்பட்டன. தேர்தல் ஆணையம் வழங்கிய அனுமதியின் பேரில் இன்று 10.1.2018 வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட் டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்காக மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வைக்கப்படும். மேலும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களான வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி உதவி ஆணையர் அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களான மதுரை மாநகராட்சி துணை ஆணையர் மற்றும் மதுரை வருவாய் கோட்டாட்சியர், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகிய அலுவலகங்களிலும் பார்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews
Tags:    

Similar News