செய்திகள்

நலவாழ்வு முகாமில் மவுத் ஆர்கன் வாசித்து சிலம்பாட்டம் ஆடும் யானைகள்

Published On 2018-01-09 08:06 GMT   |   Update On 2018-01-09 08:06 GMT
நலவாழ்வு முகாமில் திருவண்ணாமலையை சேர்ந்த யானை லட்சுமி தும்பிக்கையால் சிலம்பு சுற்றியும், மவுத் ஆர்கன் வாசித்தும் பார்வையாளர்களை அசத்தியது.

மேட்டுப்பாளையம்:

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் சிறப்பு நல வாழ்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

முகாமில் திருக்கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த 33 யானைகள் கலந்து கொண்டு புத்துணர்வு பெற்று வருகின்றன. யானைகளுக்கு தினசரி காலை மாலை 2 வேலைகளும் நடைப்பயிற்சி, ஆனந்தக் குளியல், சமச்சீர் உணவு, பசுந்தீவனம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றது.

தினசரி தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவக் குழுவினரால் யானைகள் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதற்கேற்றாற் போல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் முகாமில் கலந்து கொண்ட ஒவ்வொரு யானைகளும் தனிச் சிறப்புகளைக் கொண்டு பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் படவேடு ரேணுகாம்பாள் அம்மன் கோவில் இணைந்த ராமர் கோவில் யானை லட்சுமி தும்பிக்கையால் சிலம்பு சுற்றியும், சலங்கை மணி அடித்தும் ஸ்ரீ வைகுண்டம் இரட்டை திருப்பதி அரவிந்த லோச்சனார் கோவில் யானை லட்சுமி மவுத் ஆர்கன் வாசித்தும் அசத்துகிறது. பார்வையாளர்கள் இதனைக் கண்டு பரவசமடைந்து வருகிறார்கள். 



முகாமில் சிலம்பம் சுற்றி மவுத் ஆர்கன் வாசிக்கும் யானைகள்.

Tags:    

Similar News