செய்திகள்
சுமங்கலி பெண்கள் பூஜையில் கங்கை அமரன் பேசிய காட்சி.

ஜனவரி 1-ந் தேதி முதல் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார்: கங்கை அமரன்

Published On 2017-12-26 04:06 GMT   |   Update On 2017-12-26 04:06 GMT
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார். அதற்கான ஏற்பாடுகள் தான் நடக்கிறது. வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அரசியலுக்கு வருவார் என்று திருப்பூரில் கங்கை அமரன் கூறினார்.
திருப்பூர்:

திருப்பூரில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் 2,007 சுமங்கலி பெண்கள் கலந்துகொண்ட பூஜை திருப்பூர் தாராபுரம் ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கலந்துகொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுத்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றுள்ளார். இந்த அரசியல் நிலை குறித்து நினைத்தால் வருத்தமாக உள்ளது. பணத்தைக்கொடுத்து எது வேண்டும் என்றாலும் செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அடுத்து வருகின்ற தேர்தலிலும் கூட, தொகுதி மக்கள் வேட்பாளர்களிடம் பணம் கேட்கும் நிலை ஏற்படும். ஆர்.கே.நகரில் மட்டும் அவ்வளவு தொகை கொடுத்துள்ளார்கள். எங்களுக்கும் அவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படி பார்த்தால் ஒருவர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்றால் ரூ.50 கோடி செலவு செய்ய வேண்டும். இது ஓட்டுக்களை விலை கொடுத்து வாங்குவதை போல் உள்ளது. இதனால் பணம் இல்லாத, அடிமட்ட தொண்டர்கள், மக்களுக்காக உழைப்பவர்கள் எம்.எல்.ஏ.வாக வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்றவற்றை தடுப்பது அரசின் கடமையாகும்.


ஆர்.கே.நகரில் நோட்டாவை விட பா.ஜனதாவுக்கு குறைந்த ஓட்டு கிடைத்திருப்பது ஒருபக்கம் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு கிடைத்த ஓட்டுகள் குறைவு.

கடந்த தேர்தலில் ஆர்.கே.நகரில் தி.மு.க. வேட்பாளர் பெற்ற ஓட்டுகள் கூட இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை. தி.மு.க.வினரே தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப்போடாத நிலையை இது காட்டுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார். அதற்கான ஏற்பாடுகள் தான் நடக்கிறது. வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் அரசியலுக்கு வருவார் என்று நினைக்கிறேன். ‘ஆண்டவன் சொல்றான், அரசியலுக்கு வருகிறேன்’ என்று அவர் அறிவித்து விட்டு அரசியலுக்கு வருவார். அரசியலுக்கு அவர் வருவது நல்ல வி‌ஷயம் தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உடன் இருந்தார்.
Tags:    

Similar News